பூஞ்சாரல் குரல்
இது எண்ணங்களின் சாரல்
தேடுகை
எதையும் தேடியலைந்து
தொடர்வதில்
இறுக்கமான தேடுகைகள்
மனதில்
எதற்கேனும் தேடுகையில்
முன்னேதோ தேடியவை
கிடைக்க கூடும்
ஒருமுறையேனும்
தேடியது கிடைக்கவோ
கிடைக்காததை தேடியோ
தொடர்கிறது
தேவைகளேதும்
புலப்படவில்லைஎனினும்
புலப்படவில்லைஎனினும்
தேடுகை இன்னும்
அதிகரித்துக்கொண்டு
ஒரு முடிவுக்கு வராமலே
சில அர்த்தங்களை
மேல் எழுப்பியவாறு
தேடும் காலம் நகர்கிறது.
ஓவியம் பற்றிய விவரணை
முற்றிலும் மாறுபட்டது
அந்த ஓவியம்
ஓவியத்தின் பெயரோ
வரைந்தவரின் அடிக்குறிப்போ
எதுவும் அதில் பொறிக்கப்படவில்லை
அடிப்படை நிறங்களைக் கொண்டே
அது தீட்டப்பட்டிருந்தது
அந்த ஓவியம் தீட்டி
வெகுநாட்கள் ஆகியிருக்கும்
மூலைகள் மடங்கி
ஓவிய நிறம் வெளிரிக்கிடந்தது
இயற்கை பற்றியோ கற்பனை பற்றியோ
அல்லாது
ஏதோ பிரதிபலிப்பை தாங்கியிருந்தது
முதன்முதலாக அந்த ஓவியத்தை
கண்டெடுத்தபோது
அது என்னவென்று புரிபடவில்லை
ஓய்வு நேரங்களில்
அதை பார்க்க நேரும்போது
மனசூழலுக்கு தக்க
மாறுபட்டு ஊடுருவியது
இனிமையோ இயல்போ
அதில் தென்படவில்லை
கலையழகோ கலாச்சாரமோ
அதில் பதிவு செய்யப்படவில்லை
அடிக்கடி ஓவியத்தை பார்த்ததில்
இழையோடியிருந்தது
பயம் எங்கும் .
......ஆனாலும் உன்னை நேசிக்கிறேன்
விட்டில் பூச்சிபிடித்து
செடிகளுக்குள் கண்பொத்தி
கரிக்கோட்டி முகம்வரைந்து
இருட்டுக்குப் பிறகும்
விளையாடிய நாட்கள்
வீடுமாறிய விதத்தில்
விட்டுப்போன நட்பை
பள்ளிகள் மட்டுமே
பகிர்ந்து கொண்டது
ஊர்மாறிப் போனதும்
உதிர்ந்துபோன நட்பை
கடிதங்கள் மட்டுமே
கைகுலுக்கி கொண்டது
காலசூழலில்
கரைந்துபோன நட்பை
ஓய்வு நேரங்கள் மட்டுமே
உச்சரித்துக் கொண்டது
தொலைத்துபோன முகங்களில்
தொடரும் நினைவுகளாய் ....
ஆனாலும் உன்னை
நேசிக்கிறேன்.
ஊஞ்சல் பதியன்
ஊஞ்சல் அசைவதும்
அசைந்து சப்தமிடுவதும்
எப்போதும் நிகழ்கிறது
ஒரு அசைவிற்கும் அதன்
மற்ற அசைவுக்கும்
இடையினூடே சிலசமயம்
வித்தியாசங்கள் இருந்திருக்கிறது
மெதுவாகவும்
திரும்புகையில் வேகமாகவும்
இருப்பதற்கான அறிகுறிகள்
தெரிந்தேயிருக்கிறது
அறிகுறிகள் பார்வைக்கும்
சூழலுக்கும் தகுந்தவையாக
கட்டமைதிருக்கிறது
பின்னைய சூழலுக்கும்
பார்வைக்கும் கட்டமைவுகள்
விவரனையாகிறது
தொலைவும் தூரமும் ஊஞ்சல்
மேலிருந்தே கணக்கிட்டு
நிர்ணயிக்கப்படுகிறது
எங்ஙனமும் பதியும் என்பதற்காக(வே)
அந்த இடம்
இன்னும் பரவி வழிந்திடவில்லை
அந்தக் கூடாரத்தின் அருகாமையில்
எப்போதும் எழுந்திடும் உளிசப்தம்
முழுமையுறாத முகங்களும்
துண்டுகளாய் வருவப்பட்ட கற்கோடுகளும்
ஆங்காங்கே இரைந்தொளிரும் கற்களும்
காணவில்லை அங்கு
சிற்றோடையின் ஈரம்சொரிந்த
மணல்வெளியும்
மக்கிய கழிகளும் கீற்றுக்களுக்குமூடே
முயங்கிய சில காளான்களைத் தவிர
பதிந்திருக்கவில்லை ஏதும்
அவ்விடத்தே கடந்து செல்லும் சமயங்களில்
இழந்துபோன உணர்வுகளே
பூரணமாய் கவிந்திருக்கும்
தொலைவுகளை கடக்க முயலும்
நீயோ நானோ ஒவ்வாருவரும்
ஏதும் அறிந்திராமலே...
போக்குகள்
காற்று யோசிப்பதில்லை சற்றும்
எதன் வழியாகவும் ஊடுருவி
வெளிவரும் சக்தி
அதனுள் இருப்பதனால்
அலைந்து திரிந்து
உல்லாசமாக வாழ்கிறது
எவ்வித தடைகளுக்கும்
கட்டுக்களுக்கும் அஞ்சாது
அதன் போக்கில்
இயக்கமடைதிருக்கிறது
கூட்டங்களுக்குள்ளும் தனியிடதும்
சுறுசுறுப்புடன் அவை
வெளியிடதும் உள்ளும்
அசைகிறது புழுங்கி
விதமான சப்தங்களுடன்
இன்று நாளையெனும் மனிதர்களோடு
சூழ்ந்தே தவிக்கிறது என்றும்
தன்னை விடுவித்துக் கொள்ள.
உள்வெளி
அச்சுறுத்தல் வியாபித்திருக்கிறது
எங்கும்
தெருக்கோடி வாகனம் அழைப்பு மணி
கழிப்பறை இருட்டு மனித குறட்டை
பல்லி சப்தம் எரிவாயு அடுப்பு
சாமத்தின் கதவு தட்டல்கள்
இப்படி எல்லாமே
எதையோ யூகித்தும்
அல்லாமலும் அவைகள்
வலுவுற்றிருக்கிறது நம்முடன் .
பிராயத்தின் பயணம்
நேர்கோட்டிலோ
ஒன்றுக்கொன்று இணையாகவோ
ஒன்றை மற்றொன்று வெட்டியோ
ஒன்றுக்கு மேல் எழுந்தோ
எங்கோ செல்கின்றன
சிலவிட்டுச் செல்லல்களுடன்
சமதளப்பரப்பு ஒன்றின்
மூலைகளை குறுக்குநெடுக்காக
இனமறியாத கோடுகளுடன்
இணைப்பவை நிகழ்ந்தவண்ணம்
தொடு ஆரதோடு
மையவிலகச் செருகலுடன்
வளைத்து நெளித்து ஒடித்து
ஒன்றுடன் ஒன்று பிணைந்து
நெய்யப்பட்ட தொடுகல்
முடிந்தும் தொடர்ந்தும்
எத்தனையோ தொடுகல்
ஒவ்வருவருக்குள்ளும்
யாரும் எப்போதும்
அறியப்படாமலே .
No comments:
Post a Comment